நேற்றைய தலைப்புச் செய்தி… மரணம்

img-20161030-wa00101எல்லாம் தொழில்நுட்பத்திற்குள் அடங்கிவிட்ட இக்காலத்தில், கைபேசியின் முகத்தில் தான் தினம் விழிக்க நேரிடுகிறது. வாட்ஸ் அப்பிற்குள் நுழைந்தவுடன் பெரும்பாலும் அறிவுபூர்வமான தகவல்களை வழங்கும் குழுக்களில் உறுப்பினராக இருப்பதால், அதில் அதிக நேரம் செலவிடுபவள் நான். ஆனால், நேற்று ஒரு குழுவில் வந்திறங்கியது ஓர் துயர மடல்… கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியின் ஊடகத் துறைத் தலைவர் முனைவர்.சந்திரசேகரன் இயற்கை எய்திவிட்டார் என்பதே அந்த மடலின் செய்தி. முதலில் இருந்தது அவருடைய புகைப்படம். அதற்கு கீழே இந்த செய்தி. புகைப்படத்தைப் பார்த்ததும் அவர் சமீபத்தில் ஏதாவது சாதித்திருப்பார் என்றும் அதற்கான பாராட்டு செய்தி தான் கீழுள்ளது என்றும் எண்ணினேன். ஆனால், அவர் உடல் சாந்தி அடைந்தது என்று அறிந்ததும், அதிர்ச்சியும் துயரமும் ஒரு சேர வந்து ஒட்டிகொண்டது. எனக்கு அம்மனிதர் மிகுந்த பரிட்சையமோ நெருக்கமோ இல்லாவிட்டாலும், கல்லூரியில் அவரை காண நேர்ந்திருக்கிறது. இரு முறை அவரிடம் சிறிது பேசியும் இருக்கிறேன். அவ்வளவு தான் எனக்கு அவருடனான உறவு. ஆனாலும், இந்த செய்தியை அறிந்து வெகு நாட்களுக்குப் பிறகு அவரை மீண்டும் நினைத்துப் பார்க்கையில்….

வயோதிகம் வெளி தெரியும் தோற்றம் தான்… ஆனால், அந்த வயோதிகத்தை மீறிய ஒரு புத்துணர்வுடன் தான் எப்பொழுதும் இருப்பார். அவர் வழுக்கைத் தலையின் மீதமிருந்த நரைகளிடமிருந்து நம் கவனத்தைச் சிதறச் செய்யும் ஓர் இளமை அவருள் பொதிந்து இருக்கும். மாணவர்களிடத்து, எந்த ஒரு சிறு உரையாடலிலும் ஒரு உற்சாகமும் மென்மையும் அக்கறையும் கலந்தே இருப்பதை நான் அனுபவித்து, மறந்து, இப்பொழுது மீண்டும் உணர்கிறேன். ஏதேனும் ஒரு மாணவரை அவர் கடுமையாக திட்டினார் என்றால், இந்த துயரச் செய்தியை போல், அதையும் ஒரு செய்தியாய் வெளியிடும் அளவிற்கு, கடுமையைக் கையில் எடுக்காதவர். மென்மையான கேள்விகள், கண்டிப்பு, அறிவுரை என மாணவ மாணவியரை பெயரன், பெயர்த்தி போல பாவித்து அன்பும் அக்கறையும் செலுத்திய மனிதர் இன்று நம்மிடையே இல்லை.

இக்கடைசி வரியை தட்டச்சு செய்யும் பொழுது மனம் உள்ளூர குத்தி வலிக்கத் தான் செய்கிறது. அதனைக் காட்டிலும் பெரிய வலி, அவர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இயலாமல், கையாலாகாத்தனமாய் இங்கு இந்தப் பலகையை தட்டிக் கொண்டிருப்பது. கோவையில் இருந்திருந்தால் நிச்சயம் அவருடைய இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருப்பேன். அவர் ஆன்மா சாந்தி அடையட்டும். ஆனால், கோவையிலிருந்து வெகு தொலைவு தள்ளி இருக்கும் ஒரு கட்டிலின் மீது அமர்ந்து கொண்டிருக்கும் என்னுடைய ஆன்மா நேற்று முழுதும் சாந்தி அடையவில்லை.

பின் குறிப்பு: என் புகைப்படக் கருவியைத் தொடும் பொழுதும் அவர் நினைவு வந்து உறுத்துவதை தவிர்க்க இயலவில்லை. ஊடகத் துறைத் தலைவர் ஆயிற்றே…. L

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s