கற்சிலம்பதிகாரம்

img_20150228_063355அடுக்கடுக்காய் தன் உடலை உள்ளிழுத்துக்கொண்டே செல்லும் ஓர் மலைப்பிரதேசம்….. ஒய்யாரமாய் சாய்ந்து நின்ற இளம்பெண்ணின் சிற்றிடையாய் அம்மலை உச்சி…. மெல்லிடையின் கரடு முரடான பாறைச் சருமத்தின் நடுவே எழும்பி நின்ற திலகமாய் ஹெத்தை அம்மனின் கிரீட கோபுரம்…. ஆலய வாசலே அடைக்கலமென அரங்கேறிக் கொண்டிருக்கிறது அந்நிகழ்வு….
அமிலமும் நஞ்சும் இயற்பியலும் வேதியியலுமாய் கலந்துவிட்ட குளத்தின் அதிகமற்ற ஆழத்திலிருந்து எட்டிப் பார்த்தே துர்நாற்றம் கலக்கிறது ஓர் பழமைவாத மீன் கூட்டம்… வயோதிகம் கடந்து, நிமிர்ந்தும் தளர்ந்தும் நீள்கின்ற கிளைகளினூடே அலகுகள் ஒருக்களித்து இமை கொட்டாமல் காத்திருக்கிறது “பறவை”யாளர்கள் கூட்டம் ஒன்று….
சபை வட்டத்தின் நட்டத்தில் ஒரு பறவை… அவ்வட்டத்திற்குள் கலையின் விடை தேடி வட்டமடிக்கும் ஓர் பறவை… புள்ளினக் கூட்டமெல்லாம் மரத்தோடு ஒட்டி நின்று கலை வினாத்தாளில் சுழன்றடிக்க…. பொதுமைக்குள் தனித்து, நீள் அடர் கூந்தல் சுமந்து திரிகிறது இரு சிறகு…. சிறகுகளுக்கிடையில் கனத்துக் கொண்டிருக்கும் கூந்தலின் நீலமெல்லாம் “அவள்” அன்பின் பரப்பு… அடர்த்தியெல்லாம் “அவள்” காதலின் ஆழம்… பட்சிகளின் சுற்றளவுக்குள் மீட்சியைத் தேடி போராடுகிறது இரு உயிர்…
கூந்தலுடைய “அவர்”….. கந்தலிடையே “அவள்”….
முப்பரிமாணப் போராட்டத்தின் முடிவில், காற்றில் அலைபாய்கிறது கூந்தல்…. வெறிச்சோடியது சுற்று நிலம்…. நிலத்தில் சிலையென மண்டியிட்டது “அவள்” சிரம்….
“அவள்” உணரக் காத்திருக்கும் “அவர்” அருகாமை, பிற கலைஞர்களுடன் தொலைவை நோக்கி அந்த ஹட்டிக்குள் பயணித்துக் கொண்டிருப்பதை “அவள்” அறிய விரும்பவில்லை….
சீமையே கூடி நின்ற ஹட்டிகளில் சுய நினைவிழந்த கொண்டாட்டங்கள்…. இசையும் நடனமும் மரக்குடுவைகள் வீற்றிருந்த நெருப்பைப் போல் நளினமாய் நெளிய, அடுத்த அரை நூற்றாண்டின் மனிதத்தை வேரறுக்க ஒரு மூலிகை மது சீறிக் கொண்டிருந்தது…. மதுவின் மூலப்பொருளாய் சாதிய வீரியம்….
சிறகு முளைத்த அந்நீர் நாடோடிகள், கலைக் காற்றின் மடியில் தலை சாய்க்க, “அவர்” மட்டும் மதுவின் நெடியிலும் அன்பின் அடியிலும் திசை மாறிக்கொண்டே தனித்திருக்கையில், தச தசாப்தம் கடந்த மதுக்குடுவையின் ஈரப்பதம் காற்றில் கலந்து வந்து கட்டி இழுக்க, இனவெறியின் போதைக்கு பலியானார் “அவர்”….
“அவர்” அருந்திய மதுவின் சாபத்தில், அலைபாய்ந்த அன்பின் கூந்தல் கற்களாகி, புவியீர்ப்பு விசையிடம் தோற்று “அவள்” தாழ்ந்த சிரம் மேல் கொட்டிச் சிதறியது…. அம்மதுவின் அமிலம் அவள் இதயக்கூட்டையும் கரைத்து நொறுக்கியது….
விழித்தெழுந்த “அவள்” குருதி சொட்ட சொட்ட, அன்பின் கற்களை அள்ளி அள்ளி, ஹெத்தை அம்மன் சன்னதியில் சாபவிமோட்சனம் வேண்டி சமர்ப்பிக்கிறாள்…. ஓட்டத்தில் குலுங்கும் கற்களின் சலங்கை ஒலியும், இதயத்துகள்களின் சிதில ஒலியும் ஒன்றிணைந்ததில், “எது ஒலி அதிகம்…???” எனும் குழப்பம் இறுதியில் மேலோங்கியது….
ஓடிய கால்கள் சக்கரங்களாக, உடலின் பாகங்கள் தேர் வடிவாக. இதயக்கூட்டின் மனம் மட்டும் இரு கூறாய்ப் பிளந்து, அவலட்சணத் தேவதை உருவெடுத்து நிற்கிறது…
கலைத் தேவதை கலைஞனைச் செலுத்தும் தேரோட்டியாய்…. காதல் தேவதை இடைமறிக்கும் தடைக்கல்லாய்….
கலையை நோக்கி வாதிடும் கலைஞனின் ஆவலை, காதல் உணர்வுகளைப் புரிந்து கொள்ளக் கெஞ்சி மன்றாடி மறிக்கிறாள்….
இருதலைக்கொள்ளி தேர் நகர நகர, காதலின் இழுப்புகள் சுகமான வலியில் வழி காட்டுகின்றன….
கிளை கிளையாய் கிழிந்த பாதைகளின் புள்ளியில் தடுக்கி நிற்கிறது அவ்வாகனம்…. ஒவ்வொரு கலைஞனுக்கும் நிறைவாய் பயணம் தொடர ஒரு பாதை… தேர் விட்டிறங்கிய கலைஞனுக்கோ தேர்ச் சக்கரங்களின் திசையில் ஒரு ஆவல்… சக்கரங்கள் மீண்டும் பாதங்களாக… உடல் முழுதாய் மீண்டெழ… மனதைத் தேடுகிறது மதி….
பின்தொடர்ந்த காதல் தேவதை விட்டு விலக, கலைத் தேவதை ஸ்தம்பித்து நிற்க, உடைந்துவிட்ட இதயத்தின் உடைசல் வழி இரண்டும் வீணாய் வழிந்தோட, வழி தேட முயற்சிக்கிறாள் “அவள்”….
கலையின் வழியே ஒரு பரந்த நிலம்… காதலின் வழியே சிறு “துவாரம்”…. ஆயினும், அத்துவாரம் வழியே சிறு ஒளியின் துளி ஜீவன்…
“அவள்”, ஒளியின் வழி “அவரை” நோக்கி முட்டிக்கொண்டு பயணித்து, கற்களின் சாபம் நீக்கி அகல் விளக்காய் தூண்டி உயிர்ப்பிக்கலாம்…. அல்லது…. காதல் மனதை அவ்விடமே விட்டு எதிர்த் திசையில் கலைப் பயணத்தில் கால் பதித்து துவாரத்திற்குப் பின் இனக் கூத்தாடும் ஒரு சமூகத்தோடு, தன் கற்குவியலின் சாபத்தையும் சேர்த்து, ஒளியின் ஜீவனை தீப்பந்தமாய் வளர்த்து எரித்தும் விடலாம்…
இருவழிப் பாதையின் நடுக்கோட்டு வறட்சியில், கண்ணீரின் ஈரம் தோய்ந்த கந்தலால் துடைக்கிறாள் “அவள்”…. வறட்சியின் ஈரம் காய்வதற்குள் வந்திறங்குகிறது ஒரு பெருமழை…. அம்மழை அணைக்கப் போவது அகல் விளக்கையா…??? தீப்பந்தத்தின் அக்னியையா….???

Leave a comment