“என்” தாரிணி….

“என்” என்னும் ஈரெழுத்து வெறும் முதலாம் மனிதருக்கான தமிழ் இலக்கணம் மட்டுமல்ல….. உடைமைக்கும் உரிமைக்குமான ரகசிய கடவுச்சொல் அது….. “என்” என்னும் சொல், சுயநலத்தின் சாட்சியாய் வெறுக்கப்பட்ட போதிலும், நெருக்கத்தின் ஆதாரமாய் தவிர்க்க முடியாமல் குற்றப்பிண்ணணியிலிருந்து தப்பி விடுகிறது…..

“என்” என்பது இல்லாமல் உணர்வுகள் பிறப்பதில்லை… உணர்வுகள் பிறக்காமல் உறவுகள் வளர்வதில்லை…. உறவுகளின் வளர்ச்சியிலான உரிமைகளும் உருவாவதில்லை…. உரிமைகளை உதிர்த்துவிட்டு எந்த நெருக்கமும் நெருங்குவதில்லை….

உணர்வின் வாயிலாய், உறவுக்குள் உருகி, உரிமைகள் தோன்றி, நெருக்கத்தின் நீங்காமையில் நிறைந்திருக்கிறது என் தாரிணியின் அக நக நட்பு…..

கோதுமை நிற Bun-க்குள் வெண் மைதாவின் தெளிவைப் போல், இவள் ஊனின் நிறத்துக்குள் முழு வெள்ளை மனதின் தூய்மை….. உப்பி இருந்தாலும் உடைந்து போகாத மென்மையின் மேன்மை அவள்…அன்பை மட்டுமே தன்னுள் நிரப்பி நிரப்பி அலை அலையாய் என் வலியை வருடித் தீர்க்கிறாள்…

அறிவார்ந்த நிமிடங்களை நோக்கி சங்கமம் அறையில் சங்கமித்தோம்…. எங்கள் முதல் சந்திப்பு…. அவளின் மறைவின்மையோடு, நான் உடன் உணர்ந்த சிறுபிள்ளைத்தனத்தின் பரிகாசமே அவள் மீதான என் முதல் உளத்தோன்றல்…. பரிகாசங்களை உணராமலே என் அறியாமைக்குப் பாடம் புகட்டியது அவள் தோன்றல் உளம்…. பரிகாசத்தைப் பரிகசித்த பரிணாம வளர்ச்சியில், கொள்கையுடனான பிடிப்பு, பாசத்தையும் சேர்த்துப் பரிமாறியது…. எங்கள் உறவில் முந்திக்கொண்டு உரிமை எடுத்தவள் அவளே…. அவளால் பல உணர்வுகளைப் பெற்றவள் நான்… அவள் இருப்பிலே இயற்கையின் வாசம் வீசும்… மனவாசத்தின் திலகமான அவளைக், கடந்து செல்லும் செயற்கைத் திரவியங்களின் நெடி நெருடிவிடும்…. “உங்களுக்கு-னு ஒரு வாசம் இருக்கு-ல…..???” எனக் கேட்டு “மண”வாசத்தைத் தேட வைப்பவள் அவள்…. என் உதட்டுச் சாயங்களை எல்லாம் உரித்துவிட்டு என் இதழ்களை உயிர்பெறச் செய்தவள்….

உணவளிக்கும் கரங்களைப் பற்றி “நீங்க சாப்பிட்டீங்களா…??” என உபசரிக்கும் அந்நொடியே அவர்தம் பசிப்பிணி போக்கும் அன்னபூரணியாய் வீற்றிருக்கிறாள் என் கண் முன் பல வேளைகளில்…. குழந்தைமையின் குதூகலத்தோடு பானி பூரி, Rosemilk, தர்பூசணி, கரும்புச் சாறு என ரசித்துத் திளைக்கும் அவளுக்கு Coffee,சப்பாத்தி, மெல்லிய வெப்பத்தில் மெதுவாய் உருகும் வெண்ணை தீட்டிய Bread Toast,கால் பங்கு புளிப்பும் கால் பங்கு காரமும் மீதிப் பங்கின் விவரிக்கவியலா சுவையும் கலந்த, விடுதி புலி சாதம் என ரசிக்க வைத்து, என் கரம் நீட்டாமல் அவளுக்கு ஊட்டிய பொழுது, மெது மெதுவென்று ஓர் சிசுவை ஈன்றெடுத்து நடை பழக்கிய ஆரவாரமாய் என்னுள் அவள் அக மகிழ்ந்தாள்…… அவினாசி சாலையின் “City Restaurant” எங்கள் பிரியமான உணவுக்கூடமாய் மாறியது, Butter Naan-Panner Butter Masala மீதான என் நாவின் மயக்கத்தினால் மட்டுமல்ல…. எங்கள் இருவருக்கும் நிறைவளித்த குறைந்த விலையினாலும்…. 9௦ நாட்கள் அதன் ருசி இழந்து மங்கி விட்டிருந்த என்னை, மீண்டும் அதே மயக்கத்தைக் கொண்டு மகிழ்வித்த கட்டியங்காரி அவள், இராஜாஜி பூங்காவில் அன்று என் அன்னை உருவெடுத்து வீற்றிருந்தாள்… என் வறட்சிக்கான ஈரமாய் இவ்வுணவை விட வேறு எதையும் பாய்ச்சி விட முடியாதென உணர்ந்த அவளை என் “தோழி” என்ற ஒற்றை உறவில் அடைக்க மறுக்கிறேன்…. அதனை விட சிறந்த உறவை தேடிக்கொண்டே….

தோழமையின் தோள்களைப் பிடித்துக் கடந்த 3 ஆண்டுகளும்…. பிழைத்துக்கொண்டு மட்டும் இருக்கிற இந்த 3 மாதங்களும் எத்தனை நீண்ட துருவமாய் எட்டாமல் திரிந்துவிட்டது…..!!!

அவளுடன் மீண்டும் வாழ்ந்த அந்த சில மணி நேரங்களில், மீண்டு வந்தது என்னில் மரத்துவிட்ட அவள் தூய்மையின் ஸ்பரிசம் மட்டுமல்ல…. நான் தொலைத்துவிட்ட என் தைரியமும் தான்…. Ice cream-ஐ சுவைக்க வைத்துவிட்டு அணுத்துகளின் வீரிய வெம்மையை வீச வந்தால் “நான் கூட இருக்கும்போது upset ஆகக்கூடாது” என்ற எச்சரிக்கையுடன்…. எதிர்பார்ப்புகளுக்கு எதிராய், வீழ்ந்து விடாமல் விடை தந்தேன் “நீ கூட இருக்க-ல தாரிணி…. தாங்கிக்குவேன்…. சொல்லு” என்று…. “நீ கூட இருக்க-ல” என்ற சொற்றொடர் நம்பிக்கையின் மறுக்கமுடியாதொரு சுவடு…. அவளோ என் சுவடு பதிந்த மறக்கமுடியாதொரு சிகரம்….. ஆம்… அவள் உடன் இருந்தாள்….. அன்று நான் உயிரிழந்தும் அவளோடு வாழ்ந்து கொண்டு தான் இருந்தேன்…. அவள் அன்பின் காற்றுப்புகா அணைப்பில் என் உயிர் மூச்சுக் கலந்த எங்கள் நட்பின் சுவாசத்தில்….. அவள் அணிவித்த பச்சை வளைகளின் சத்தத்தில் அவள் அன்பின் மௌனத்தை கேட்டுக்கொண்டே சிறை இருக்கிறேன்….. அவள் “என்” தாரிணி……

Advertisements

6 thoughts on ““என்” தாரிணி….

  1. உங்கள் இனிப்பான நட்பும் நற்றமிழும்…சங்கமமாய் மலர்ந்து மணக்க என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s