………………………

dscn8285dscn8317     முற்றுப்புள்ளியின் அருகில் மேலும் சில புள்ளிகள் வைத்து, தொடரும் முயற்சியில், நீண்டு கொண்டு சென்ற புள்ளிகளெல்லாம் புத்தகக் கண்காட்சியினுள்….. பரந்து திறந்த இலக்கிய அரங்கினுள் ஊர்ந்து திரிந்து, நிஜங்கள் சுருங்கிவிட்ட நினைவலைகளுக்குள் சிக்கி ஒடுங்கிக் கொண்டிருந்ததோர் சரீரம்… மனம் உயிர்ப்புடன் இருத்தலே உயர்திணையின் அடையாளம்…. மனதைக் கொன்றுவிட்ட அல்லது மனம் கொல்லப்பட்ட “அது” வெறும் அஃறிணைச் சடலம் மட்டுமே….

மேலும்… மனதை மதிக்கும் மனம் அனைவருக்கும் இருக்கிறதா என்ன….??? உடலே பிரதானமாகிவிட்ட சமூகத்தில் தானே உடன்பட்டிருக்கிறோம்….!!!

இலக்கியத் தேடலின் நோக்கமெல்லாம், அன்பிற்குரிய ஓர் இலக்கியனின் வாசத்துடன் காற்றில் கரைந்து மறைந்து கொண்டிருந்தது…. புதுப் புத்தகத்தின் பக்கங்களின் வாசத்தையும் சேர்த்தே தன்னுடன் இணைத்துக் கொண்டு….

இருளுக்குள் சிக்கிக்கொண்ட முகமூடியாய் தவித்துக் கொண்டிருக்கையில், இடைவெளிகள் இருந்தும் இறுக்கத்தினின்று வெடித்து வர “அந்த” இல்லாத மனதால் இயலவில்லை…. அதற்கு இஷ்டமுமில்லை… மீண்டும் மீண்டும் மூழ்கி மூச்சுத்திணற ஏங்க வைக்கும் மாண்புமிகு வேதனை அது…. அத்தகைய வேதனைக்கும் ஏக்கத்திற்கும் மட்டுமே வலியை ஏற்க வழி தேடும் மாண்பு உண்டு….

அறுசுவை விருந்தின் ருசி, சிலருக்கு உண்மையில் உணவிலிருந்து புறப்படுவதில்லை…. ஓர் உணவுப் பிரியனின் ருசியின் ரசனையிலிருந்தே பிறப்பெடுக்கிறது… ரசிக்கக் கற்றுக்கொடுக்க ரசிகன் இல்லாத வேளையில், அந்த சிலரின் சுவை மொட்டுக்கள் மரத்துத்தான் போவது போல், இங்கே ஓர் இலக்கியத் தேடல், மனதோடு சேர்ந்து மரித்துத் தான் போகிறது….

மதுரை வீதிகளில் சுவை நிரம்பி வழியும் ஜிகர்தண்டாக்களும், இட்லி கடை இட்லிகளும், எங்கெங்கும் Rosemilk பானமும்… ரசித்து ரசித்துப் பருகப் பழக்க ஓர் துணை இல்லையேல், உலகறிந்த தீர்க்க ருசியெல்லாம் நாக்கில் உணரப்படாமலே போகும்….

வெங்கட்ராமின் “நித்யகன்னி”க்கும் திருமதி பஷீரின் “எடியே”வுக்கும் செவி சாய்க்க ஓர் வாசகி இல்லாவிட்டால், நூலின் பக்கங்களுக்கு திறவுகோலே இல்லை…. எழுத்தாளர்களுக்கும் அந்த வாசகிக்கும் இடையில் ஓர் இலக்கியப் பிரியன் இல்லையேல், இருவருக்குமான இணைப்பே இல்லை….

“நித்யகன்னி”, “மாதவியின்” பித்து நிலையோடு முடிந்து விட வேண்டுமா என்ன…?? “குறத்தி முடுக்கு” நூலில் ஆதரவுக் கரம் தேடி தன் கரம் நீட்டியிருப்பவள் ஒரு விலைமகளாய் மட்டும் தான் இருக்க வேண்டுமா என்ன…?? வாசகியாய் இருக்கலாகாதா…?? முற்றத் துடிக்கும் அந்தப் பித்து நிலை அவசர அவசரமாய் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது ஓர் வாசகியின் மாண்டுவிட்ட மனதின் ஆன்மாவாய் இருக்கலாமே….

இயல் நிரம்பிய இடமெல்லாம் ஓர் வெற்றிடத்தை விரித்துக் கொடுக்கையில், அங்கே நிறைகிறது…. ஆங்கார அவஸ்தைக்கு இணையான ஆதங்கத்தின் பெருவெளி…. எந்த புத்தக இடுக்கிலும் அடங்காத, அந்த வெற்று வெளிக்கு மட்டுமே உரிய அதற்கான சாசனமாய் உருவேடுத்ததோர் கதறலின் புதுக்கதை…..

புத்தக அரங்கினுள் வெற்றுத் தராசுகளின் ஓசையுடன் நீதி தேவதை நுழைகிறாள்… அவள் தராசின் இரு தட்டுக்களில் மூவருக்கான ஆசனம்… ஒடிசலான குற்றம் புரிந்தவருக்கும், ஒடிசலுக்குள்ளயே ஒடுங்கிய குற்றம் புரியத் தூண்டியவருக்கும் ஒரே தளம் தாராளம்… திடகாத்திரமான, குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கு தனியே ஒரு தளம் என்றாலும், தராசின் நியம விதிப்படி, அது தாழ்ந்தே இருந்தது… சந்தேகத்திற்கு மட்டுமல்ல விசாரணைக்கே இடமின்றி வழக்கில் மூவருக்குமான கதாபாத்திரங்கள் நிரூபிக்கப்பட்டன…. தீர்ப்புக்கான தருணத்தில் நீதி தேவதையின் கண்கட்டுக்குள் கருணை புகுந்து கண்ணீராய்த் தேங்கி கட்டவிழ்த்தது…. கருணைக்கும் நீதிக்கும் இடையேயான விசித்திர போராட்டத்தில், இறுதியாய் கருணையின் வெற்றியே தீர்ப்பானது…. 16,௦௦௦ கசையடிகள்…. இங்கு கருணைக்கு என்ன வேலை…??? இருக்கிறதே… ஒடிசலுக்குள் ஒடுங்கிப் போனவருக்கு 16,௦௦௦ கசையடிகள் தந்தால், தண்டனை முடிவதற்குள் கசையடிகள் மட்டுமே மிஞ்சும்…. தண்டனைக்குரியவரோ மிச்சமின்றி உடைந்து நொறுங்கியிருப்பார்….. ஆனால், தீர்ப்பு என்ற ஒன்று எழுதப்படத்தான் வேண்டும்…. அது நிறைவேற்றப்படத்தான் வேண்டும்…

இந்தச் சிக்கலை சுலபமாய் அவிழ்ப்பதற்கென்றே ஓர் சுமை தாங்கி, குற்றத்தின் கோரப்பலன் தாங்கி நீதிமன்றத்தைத் தேடி வந்திருக்கிறதே…. 16,௦௦௦ கசையடிகளும் பாதிக்கப்பட்டவரின் வலிமைக்கு இடம் மாற்றப்படுகின்றன….. தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது… இறுதியில், கருணை வென்றது….!(?).

அடுத்ததாய், குற்றம் புரிந்தவருக்கான தண்டனை சாதுர்யத்தின் அளவு கோலில் ஆழப் புதைந்த ஆஸ்தியாய் எடுக்கப்பட்டது… கைகள் நோக 16,௦௦௦ கசையடிகள் கொடுப்பதே ஓர் தண்டனை… தவறே இழைக்காத ஓர் ஊழியனுக்கு அத்தண்டனை தர இயலாது….!(?). எனவே, அது குற்றம் புரிந்தவரின் பொறுப்பானது… இங்கே, நீதி வென்றது….!(?).

கசையடியின் சீற்றத்தில் துடிப்பின் கதறல் நலிந்து போனது… பின் முனகிப் போனது… நீதி தேவதை தன் பணியாற்றிவிட்டாள்…. மூவரையும் மீண்டும் தன் தராசில் ஏற்றி வைத்தாள்…..

இம்முறை, தழும்புகளின் கனத்தாலும், மனதின் கனத்தாலும் அந்த கீழிறங்கிய தளம் மேலும் மேலும் இறங்கி, தன்னை விடுவித்து விட்டு, குற்றத்தாலும் நீதியாலும் பலன்(!) பெற்றுக் கிடந்தவரை வீசிவிட்டு உருண்டோடியது….

தற்போது வலிமையின் தன்மையோடு பொருத்திய ஆறுதல் வார்த்தைகள் ஒலித்துக்கொண்டிருந்தன…. கசையடிகளின் நெடிய ரீங்காரம் நின்று போன செவிகளுக்குள்…. இறுதி வரை காயத்தை ஆற்றாமல்….

இயற்கையின் கொடை எல்லாம் நீதியற்ற கருணைக்கு இரையாகட்டும்….

தன் கடமையாற்றிவிட்ட நீதி தேவதை விடைபெற்றுச் செல்கையில் புத்தக அரங்கைத் தன் இருப்பின் திரை விலக்கி திறந்து விட்டுச் சென்றாள்….

பித்து நிலைக்குள் சிக்கிய அந்த மனதின் ஆன்மா தட்டுத் தடுமாறித் தன்னை மீட்டெடுக்க முனைந்து கொண்டிருந்தது…. ஆனால், “வெற்றி” என்பது அனைவருக்கும் கிட்டக்கூடியதல்ல….

தன் மரித்துப் போன மனதை உயிர்ப்பிக்க ஓர் சிரஞ்சஜீவியை இலக்கியத்திற்குள் தேட வந்த சடலம்…. தனக்கான இலக்கிய ரசிகரை, இலக்கிய விமர்சகரை, ஓர் பரிந்துரையாளரை, தன் அன்பிற்குரிய இலக்கியத் துணையை, இலக்கியத்தாலேயே இணைந்தவரை இலக்கியத்திற்குள் தொலைத்து விட்டுத் தேடுகையில் தன் இலக்கியத் தேடலையும் தவறவிட்டது….

இலக்கியரின் தேடலில் இலக்கியத் தேடலையே தொலைத்த மனப்பிறழ் அது… தொலைந்து போன இலக்கியத் தேடலுக்குள் இத்தனை பேரைத் தொலைத்துவிட்டு ஒருவரையும் கண்டறியாமல் தன்னையும் தொலைத்து, கற்றை இலக்கியத்துள் இல்லாத ஒற்றைக் கதையை எடுத்து வந்த மாண்டுவிட்ட ஒரு மனதின் ஆன்மாவின் கதை…. தொடக்கத்தில் முற்றுப்புள்ளியாய் தொடங்கி தொடர்ந்த புள்ளிகளெல்லாம் நீண்டு கொண்டே எங்கோ செல்கின்றன, கதையின் பாதை அறியாமலேயே…

இலக்கியப்பிரியரான இலக்கியத் துணை கொடுத்த மாயக் கசையடிகளின் வலி மட்டுமே இறந்தகாலத்தில் அவர் உடன் இருந்ததை உணர்த்திக் கொண்டே எதிர்காலக் கதையின் பாதையில் பயணிக்க வைத்தது…..???

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s